யூனிக்கோடு என்றால் என்ன?
யூனிக்கோடு எந்த இயங்குதளம் ஆயினும், எந்த நிரல் ஆயினும், எந்த மொழி ஆயினும் ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்துவமான எண் ஒன்றை வழங்குகிறது.
அடிப்படையில் கணினிகள் எண்களுடன்தான் தொழிற்படுகின்றன. அவை எழுத்துக்களையும் பிற வரியுருக்களையும் எண்வடிவிலேயே சேமிக்கின்றன. யூனிக்கோடு கண்டறியப்படு முன்னர் இவ்வாறு எழுத்துக்களுக்கு எண்களை வழங்க நூற்றுக்கணக்கான குறியீட்டு முறைகள் இருந்தன. இவற்றில் எந்தவொரு முறையிலும் போதுமான அளவு எழுத்துக்கள் இருக்கவில்லை: உதாரணமாக, ஐரோப்பிய ஒருங்கியத்திலுள்ள மொழிகளை உள்ளடக்கவே பல்வேறு குறியீட்டு முறைகள் தேவைப்பட்டன. ஆங்கில மொழியில் கூட எந்தவொரு குறியீட்டு முறையினாலும் பொதுவாகப் புழங்கும் எல்லா எழுத்துக்களையும், தரிப்புக் குறிகளையும், மற்றும் தொழிநுட்பக் குறிகளையும் உள்ளடக்க முடியவில்லை.
மேலும் இக்குறியீட்டு முறைகள் ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன. அதாவது, இரு குறியீட்டு முறைகள், இரு வேறு எழுத்துக்களுக்கு ஒரே எண்ணையோ, அல்லது ஒரே எழுத்துக்கு இரு வேறு எண்களையோ புழங்கலாம். இதனால் எந்தவொரு கணினியும் (குறிப்பாகப் பரிமாறிகள்) பல்வேறு குறியீட்டு முறைகளை ஆதரிக்க வேண்டியுள்ளது; இந்நிலையிலும் வெவ்வேறு குறியீட்டு முறைகளுக்கு இடையிலோ அல்லது இயங்குதளங்களுக்கு இடையிலோ தரவுகள் பரிமாறப்படும் போது, அத் தரவுகள் பழுதுபடச் சாத்தியமுள்ளது.
யூனிக்கோடு இவற்றையெல்லாம் மாற்றியமைக்கிறது!
யூனிக்கோடு எந்த ஒரு மொழியிலும், எந்த ஓர் இயங்கு தளத்திலும், எந்த ஒரு நிரலிலும், ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்துவமான எண்ணொன்றை வழங்குகிறது. Apple, HP, IBM, JustSystem, Microsoft, Oracle, SAP, Sun, Sybase, Unisys போன்ற
பல முன்னணி நிறுவனங்கள் யூனிக்கோடுத் தரத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. XML, Java, ECMASCript (JavaScript), LDAP, CORBA 3.0, WML போன்ற நவீன தராதரங்களுக்கு யூனிக்கோடு அவசியம். அத்துடன் ISO/IEC 10646 தரத்தைச் செயற்படுத்த அதிகாரப்பூர்வமான வழி யூனிக்கோடு ஆகும். பல இயங்கு சிட்டங்களும், அனைத்து வலையுலாவிகளும், மேலும்
பல மென்பொருட்களும் யூனிக்கோட்டை ஆதரிக்கின்றன. யூனிக்கோடு தரத்தின் தோற்றமும், அதனை ஆதரிக்கும் கருவிகள் கிடைப்பதும், அண்மைய உலகளாவிய மென்பொருட் தொழிநுட்பப் போக்கில் முக்கியமான நிகழ்வுகளாகும்.
சார்புச்சேவை அல்லது பல்லடுக்குப் பயன்நிரல்களிலும், வலைத்தளங்களிலும், பழைய குறியீட்டு முறைகளை விடுத்து யூனிக்கோட்டை உள்ளமைப்பதன் மூலம் கணிசமான நிதிச் சிக்கனத்துக்கு வழியுண்டு. யூனிக்கோடு ஒரு தனி மென்பண்டத்தையோ அல்லது ஒரு தனி வலைத்தளத்தையோ, எந்தவிதமான மீளமைப்புமின்றி, பல இயங்குதளங்கள், மொழிகள், நாடுகளை இலக்காகக் கொண்டு தயாரிக்க உதவுகின்றது. யூனிக்கோடு மூலம் பல்வேறு கணினி அமையங்களுக்கு ஊடாகத் தரவுகளைப் பழுதின்றி அனுப்பலாம்.
யூனிக்கோடு ஒன்றியம் பற்றிய தகவல்
யூனிக்கோடு ஒன்றியம், நவீன மென்பொருட்களிலும் தராதரங்களிலும் உரைக் குறியீடுகளை வரையறுக்கும் யூனிக்கோடுத் தரத்தை உருவாக்கி, மேம்படுத்தி, பரப்புவதற்கான இலாப நோக்கற்ற நிறுவனம். கணினி மற்றும்
தகவற் தொழிநுட்பத் துறையைப் பரந்தளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் பல்வேறு கூட்டமைப்புக்களும் நிறுவனங்களும்
இவ்வொன்றியத்தில் அங்கம் வகிக்கின்றனர், உறுப்பினர்கள் செலுத்தும் உறுப்பியத் தொகைகளினால் மட்டுமே
இவ்வொன்றியம் நிதி பெறுகிறது. யூனிக்கோடுத் தரத்தை ஆதரித்து அதன் விரிவாக்கத்திலும் செயற்பாட்டிலும் பங்களிக்க விரும்பும் எந்தத் தனி நபரும் கூட்டுக்கழகமும் யூனிக்கோடு ஒன்றியத்தின் உறுப்பினர் ஆகலாம்.
Tamil translation by Thuraiappah Vaseeharan
Last updated: - Friday, September 01, 2006 11:12:38 PM