புதுடில்லி: இனி, "போலீஸ் நிலையத்துக்கு வரும் அனைத்து புகார்களையும் எப்.ஐ.ஆர்., ஆக (முதல் தகவல் அறிக்கையாக) பதிவு செய்ய வேண்டும்' என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா தற்கொலை வழக்கில் கைதான முன்னாள் டி.ஜி.பி., ரத்தோர் மீது, ருச்சிகா தற்கொலை செய்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் ஐகோர்ட் உத்தரவு வந்தபிறகே, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப் பட்டது. ருச்சிகாவின் பெற்றோர், ரத்தோர் மீது புகார் அளித்த போது அதை வாங்க போலீசார் மறுத்து விட்டனர். அதோடு, ரத்தோருக்கு ஆதரவாகவும் சில போலீசார் செயல்பட்டுள்ளனர். ருச்சிகாவின் சகோதரர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொடுமைப்படுத்தியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்பதற்காகவும், போலீசார் தங்கள் பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பொதுமக்கள் ஒரு புகார் மீதான பதிவு எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும், "போலீஸ் நிலையத்துக்கு வரும் அத்தனை புகார்களையும் எப்.ஐ.ஆர்., ஆகப் பதிவு செய்ய வேண்டும்' என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், "புகாரைப் பதிவு செய்யும் போது என்ன காரணத்துக்காக எப்.ஐ.ஆர்., போடப்படுகிறது என்பதையும், அப்படி எப்.ஐ.ஆர்., போட முடியவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்' என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் வட்டாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்துப் புகார்களும் எப்.ஐ.ஆர்., ஆகப் பதிவு செய்வதை இந்த உத்தரவு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், புகார் தவறானது என்றால் எப்.ஐ.ஆர்., பதிவு செய்த பின்பே அது பற்றி விசாரிக்க வேண்டும். இதனால், உள்நோக்கத்துடன் புகார் அளிப்பது குறையும் என்றும் கருத்துகள் கூறப்படுகின்றன. பொதுவாக அதிகாரம் மற்றும் அரசியல் வட்டங்களின் நெருக்குதலால் வெறும் பேருக்கு எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படுவதும், பதிவே செய்ய மறுக்கப்படுவதும் இனி நடக்காது. இதுவரை பழங்குடியினர் மீதான தாக்குதல்களுக்கு எப்.ஐ.ஆர்., போடாமலே தட்டிக் கழித்து வந்ததைப் போல, இனி எப்.ஐ. ஆர்., பதிவு செய்யாமல் தட்டிக்கழிக்க முடியாது. பல்வேறு வகைகளிலும் பொதுமக்களுக்கு நன்மையைச் செய்யும் உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு, இன்னும் ஒரு வாரத்துக்குள் அமலுக்கு வரும் என்று தெரிய வருகிறது.
குற்றத்தில் சிக்கினால் மெடல் பறிபோகும்: ருச்சிகா வழக்கில் கைதான ரத்தோர், தனது சிறந்த பணிக்காக வாங்கியுள்ள பதக்கத்தைப் பறிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து வரும் 4ம் தேதி கூடவுள்ள மத்திய அவார்டு கமிட்டியில் இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். இதைத் தொடர்ந்து, குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்ட உயரதிகாரிகள் எந்தத் துறையைச் சார்ந்தவராய் இருப்பினும், அவருக்கு கவுரவம் அளிக்கும் விதத்தில் வழங்கப்பட்ட பதக்கங்கள் மற்றும் வீரதீர விருதுகளைப் பறிக்க வழிவகை செய்யும் புதிய கொள்கையை மத்திய அரசு உருவாக்க இருக்கிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "தனது பணிக்கு இழுக்கு நேரும் வகையிலோ அல்லது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலோ அல்லது அப்படி ஜனாதிபதியால் கருதப்பட்டாலோ கூட, ஒருவர் பெற்றிருக்கின்ற பதக்கம் மற்றும் வீரதீரச் செயல்களுக்கான விருதுகள் பறிக்கப்படும்' என்றார். இது அமல்படுத்தப்பட்டால், குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்ட உயரதிகாரியின் பதக்கம் தானாகவே பறிக்கப்பட்டு விடும்.
Source: Dinamalar, dated January 1, 2010 link: http://www.dinamalar.com/General_detail.asp?news_id=20353