பொங்கல் (திருநாள்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொங்கல் தமிழர் திருநாளாக தமிழகத்தில், இலங்கை போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் தை முதல் நாள் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் விழா, தமிழர்களின் தனிப்பெரும் விழா. எத்தனையோ விழாக்களை தமிழர்கள் கொண்டாடினாலும் வேறெந்த விழாவுக்கும் கொண்டாட்டத்துக்கும் இல்லாத சிறப்பு பொங்கலுக்கு மட்டும் உண்டு. மற்ற விழாக்கள் போலன்றி, பொங்கல் எல்லா சமயத்தினருக்கும் பொதுவானதாகவும், சமயம் கடந்ததாகவும் உள்ளது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து பதியன புகுதல் வழக்கம். தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மாட்டுப்பொங்கலும் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.
No comments:
Post a Comment